உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 192 ரன்களை இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023ன், 12வது லீக் ஆட்டம் இன்று குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த ஏழு போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்றை மாற்ற பாபர் அஸாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், வரலாற்றைத் தக்க வைக்க ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியும் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அஸாம் 50 ரன்களையும், முகமது ரிஸ்வான் 49 ரன்களையும், இமாம் உல் ஹக் 36 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் 42.5 ஓவரில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து என அனைத்து விக்கெட்களையும் பாகிஸ்தான் அணி இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு, பாகிஸ்தான் அணி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி சார்பில் பந்து வீசிய பும்ரா, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.