டி20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வெளியீடு - கலக்கும் இந்திய அணி!
ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி முதல் இடத்திலேயே நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 39 புள்ளிகள் பின்னடைவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் எவின் லீவிஸ் மூன்றாம் இடம் வகிக்கிறார்.
பாகிஸ்தானின் பாபர் அசாம் 21-வது இடத்திலிருந்து முன்னேறி 6ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். சமீபத்தில் பாகிஸ்தானில் வேர்ல்டு லெவன் அணியுடன் நடைபெற்ற தொடரில் தொடர் நாயகன் பட்டம் பெற்றதால் இவருக்கு இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்திய அணியின் பவுளர் ஜஸ்பிரித் பம்ரா தரவரிசைப் பட்டியலில் 2வது இடம் வகிக்கிறார். பாகிஸ்தானின் இமாத் வசிம் முதலிடம் வகிக்கும் இந்தப் பட்டியலில் ரவிச்சந்திரன் அஷ்வின் பத்தாவது இடத்திலேயே நீடிக்கிறார்.
அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 5வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.