சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா சில தினங்களுக்கு முன்னால் இந்தியா திரும்புவதாகவும், அவர் இந்தாண்டு நடைபெறுகிற ஐபிஎல் தொடரில் பங்கெடுக்க மாட்டார் எனவும் தகவல் வெளியாகியது. பின்பு சென்னை அணி நிர்வாகவும் அதனை உறுதிபடுத்தியது. ரெய்னா தன்னுடைய சொந்த காரணங்களுக்காகவே இந்தியா திரும்பியுள்ளார் என முதலில் கூறப்பட்டது. பின்பு தோனிக்கு ஒதுக்கியதை போல பால்கனி வசதியுள்ள அறை ரெய்னாவிற்கு ஒதுக்கப்படவில்லை எனவும், அதில் அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் தோனிக்கும், ரெய்னாவிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது எனவும் தகவல் வெளியாகின. அதன் பின்பு இன்று வரை அது குறித்தான சர்ச்சை ஒயவில்லை. இந்நிலையில் ரெய்னா தற்போது இது குறித்து கருத்துக் கூறியுள்ளார்.
அதில் அவர், "எனக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே எந்த மோதலும் இல்லை. நான் இந்தியா திரும்பியது என்னுடைய தனிப்பட்ட முடிவே. சென்னை அணி என்பது எனக்கு மற்றொரு குடும்பம். தோனி என் வாழ்வில் மிக முக்கியமானவர். எனக்கு இது கடினமான காலமாக அமைந்தது. இங்கு நான் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த தொடரிலே கூட என்னை நீங்கள் அமீரகத்தில் காணவும் வாய்ப்புள்ளது" எனக் கூறினார்.
மேலும் சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் குறித்து பேசிய ரெய்னா, "அவர் எனக்கு ஒரு தந்தையைப் போன்றவர். பல நேரங்களில் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவரும் என்னை அவரது குழந்தை போல தான் நடத்துவார். அவர் கூறிய விஷயம் முழுவதும் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. தந்தைக்கு மகனைத் திட்டுவதற்கு உரிமை உள்ளது. அடுத்த நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு சென்னை அணிக்காக விளையாட விரும்புகிறேன்" என்றார்.
ரெய்னா அளித்த இந்த விளக்கம் மூலம் கடந்த இரு நாட்களாக நீடித்து வந்த சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.