![A stunning Lucknow team with 14 bowlers; New bowlers in every match](http://image.nakkheeran.in/cdn/farfuture/00BRNNnaXrRpM4Uapcol9sqdGw2jvfjJSrJgaujezG4/1682788906/sites/default/files/inline-images/47_47.jpg)
16 ஆவது ஐபிஎல் சீசன் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. இறுதிப் பந்துவரை ஆட்டம் செல்வதால் பரபரப்பு பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்கிறது. இது ஒருபுறம் இருக்க சுவாரசியங்களுக்கும் பஞ்சமில்லாமல் போட்டிகள் நடந்து வருகிறது.
10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கும் நிலையில் அனைத்து அணிகளும் சராசரியாக 6 முதல் 10 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்திவருகிறது. சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட அணிகளும் 6 பந்துவீச்சாளர்களுடன் அத்துறையை கட்டமைத்து வைத்துள்ளது. அணிகள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் பெரும்பாலும் பந்துவீச்சாளர்களை மாற்றாமல் களமிறங்கி வருகின்றன.
ஆனால் லக்னோ அணி இதுவரை 14 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அந்த அணி 257 ரன்களைக் குவித்தது. பொதுவாக அணிகள் எதிரணிகள் கட்டுக்கு அடங்காமல் ரன்களைக் குவிக்கும் போது தான் மாற்று பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவார்கள். முன்னதாக எதிரணி அதிகமாக ரன்னை குவிக்கும் போது சென்னை கேப்டன் தோனி ரெய்னாவை பந்து வீச அழைப்பார்.
ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணிக்கு வெற்றி என்பது உறுதி என்ற நிலை ஆன போதும் கூட கேப்டன் கே.எல்.ராகுல் தொடர்ச்சியாக பந்துவீச்சாளர்களை மாற்றிய வண்ணம் இருந்தார். அந்த போட்டியில் ராகுல், பூரன், தீபக் ஹுடா தவிர மற்ற 9 வீரர்களும் பந்து வீசினர். கெயில் மேயர்ஸ் 1 ஓவர் வீச அவருக்கு இம்பேக்ட் ப்ளேயராக வந்த அமித் மிஸ்ரா 2 ஓவர்களை வீசினார். இதன் மூலம் லக்னோ அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் இதுவரை 14 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளது.
அந்த அணியில் இதுவரை ஜெயதேவ் உனத்கட், ஆவேஷ் கான், குருணால் பாண்டியா, மார்க் வுட், ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, கிருஷ்ணப்பா கவுதம், கெய்ல் மேயர்ஸ், யஷ் தாக்கூர், யுத்விர் ஷாரக், நவீன் உல் ஹக், மார்க்கஸ் ஸ்டோனிஸ், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா ஆகியோர் பந்து வீசியுள்ளனர்.
பேக் அப் பந்து வீச்சாளர்களாக ஸ்வப்னில் சிங், ப்ரேராக் மண்கட், டேனியல் சாம்ஸ், ரோமாரியோ ஷெபர்டு, மயங்க் யாதவ், கரண் ஷர்மா, மொஹ்சின் கான் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.