இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு மூன்று டி20 கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரிலும் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறது.
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியின் சார்பில் சினே ரானா 3 விக்கெட்களை சாய்த்தார். ரேனுகா சிங் தீப்தி சர்மா தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஸ்மிரிதி மந்தனா இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வேகமாக ஆடிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டிப் பிடித்தது. இந்திய அணியின் சார்பில் ஸ்மிரிதி மந்தனா 53 பந்துகளில் 79 ரன்களை எடுத்தார். 13 பவுண்டரிகளை அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகியாக அவரே தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளன.