இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மாவிற்கு இந்தாண்டிற்கான கேல் ரத்னா விருது வழக்கப்படும் என இந்திய அரசு அறிவித்தது. கேல் ரத்னா விருதானது இந்திய அரசு சார்பில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். விருது அறிவிக்கப்பட்டதும் அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்ததன. தற்போது ரோஹித் ஷர்மா கேல் ரத்னா குறித்து பேசிய காணொளியை பிசிசிஐ தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அதில் அவர், "விளையாட்டுத்துறைக்கான இந்தியாவின் உயரிய விருதைப் பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இவ்விருதைப் பெறுவதில் பெருமைப்படுகிறேன். என்னுடைய பெயரைப் பரிந்துரை செய்த விளையாட்டுத்துறை அமைச்சருக்கும், பிசிசிஐ-க்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து கடினமாக உழைக்கவும், அதன் மூலம் நாட்டிற்கு பெருமை சேர்க்கவும் உறுதி கொள்கிறேன். இதற்கு முன்பு இவ்விருது பெற்ற மூன்று சாதனையாளர்களுடன் இந்தப் பட்டியலில் இணைந்ததை பெருமையாக நினைக்கிறேன்" என்றார்.
இதற்கு முன்பு சச்சின், தோனி, விராட் கோலி என மூன்று கிரிக்கெட் வீரர்கள் இதே போல கேல் ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.