13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் ஐந்தாவது நாளான நேற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில், மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில், ரோகித் ஷர்மா அடித்த மொத்த சிக்ஸர்களின் எண்ணிக்கையானது 200 ஆக உயர்ந்துள்ளது.
அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முறையே கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், தோனி ஆகியோர் உள்ளனர். தோனி 212 சிக்ஸருடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரோகித் ஷர்மா 200 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார். இன்னும் 12 சிக்ஸர்களே தேவை என்பதால் அடுத்து வரும் சில போட்டிகளிலேயே ரோகித் ஷர்மா தோனியை முந்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
5000 ரன்கள் குவித்த வீரர்கள் எனும் பட்டியலில் இணைய, ரோகித் ஷர்மா இன்னும் 10 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளதால் விரைவில் இந்த மைல்கல்லையும் அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.