இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கரோனா தொற்றால் அணிகள் கரோனா தடுப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். மேலும் அணி வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சமீபத்தில் அணியுடன் இணைந்த ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, சுப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகியோர் மெல்போர்னில் ஓரிடத்தில் உணவருந்தியுள்ளனர். அப்போது அங்குவந்த இந்திய அணியின் ரசிகர் ஒருவர், வீரர்களின் உணவிற்குப் பணம் செலுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ரிஷப் பந்த் அந்த ரசிகரை கட்டியணைத்து நன்றி தெரிவித்துள்ளார்.
இதனை அந்த ரசிகர் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, இந்திய அணி வீரர்கள் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா, ரிஷப் பந்த், நவ்தீப் சைனி, சுப்மன் கில், ப்ரித்வி ஷா ஆகிய ஐவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள், கரோனா தடுப்பு விதிகளை மீறினார்களாக என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.