2021ஆம் ஆண்டின் இருபது ஓவர் உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியாவின் இருபது ஓவர் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, சில நாட்களுக்கு முன்னர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்தச் சூழலில் அவர், பயிற்சியின்போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அடுத்து நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதனால் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவாரா, ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால் கேப்டன் பொறுப்பை யார் வகிப்பார் என கேள்விகள் எழுந்தன. இந்தநிலையில், ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ள காயம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னர் குணமாகிவிடும் என்றும், எனவே அவர் ஒருநாள் தொடரில் பங்கேற்பார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தான் விலகுவதாக விராட் கோலி பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. தனது மகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாளின்போது, குடும்பத்தோடு நேரத்தை செலவிட விரும்புவதால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகுவதாக விராட் கூறியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.