தோனி போல தன்னை நினைத்துக் கொண்டது தான் ரிஷப் பண்ட் செய்த மிகப்பெரிய தவறு என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் நல்ல வரவேற்போடு அதிரடியாக அறிமுகமாகியவர் ரிஷப் பண்ட். அடுத்தடுத்த போட்டிகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்பதால் தற்போது அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளதால் அந்த இடத்திற்கு யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் எனத் தோனியைப் போன்றே இருதுறைகளிலும் திறமை உள்ளவர் என்பதால் அந்த இடத்திற்கு ரிஷப் பண்ட் சிறந்த தேர்வாக இருக்குமென கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "ஒவ்வொரு முறை ரிஷப் பண்ட் களத்தில் இறங்கும் போதும் அவர் தன்னை தோனியுடன் ஒப்பிட்டுக்கொள்கிறார். இதிலிருந்து அவர் வெளியே வரவேண்டும் என அவரிடம் பல முறை கூறியுள்ளோம். தோனி தனித்துவமானவர், அதே போல உன்னிடமும் தனித்துவமும், திறமையும் இருக்கிறது. அதனால்தான் உன்னை நாங்கள் தேர்வு செய்துள்ளோம் என அவருக்கு அறிவுரையும் கூறியுள்ளோம். அவர் தோனியின் நிழலிலேயே இருந்ததால் அவரைப் பார்த்து அனைத்தையும் அவரைப் போல மாற்றிக்கொண்டார். அவரின் உடல்மொழியையும் தோனியைப் போல மாற்றினார். நீங்கள் அதைக் கவனித்தால் உங்களுக்கே தெரியும்" என்றார்.