16 ஆவது ஐபிஎல் சீசனில் மற்ற எந்த அணிகளை விடவும் வீரர்களை விடவும் தோனியின் அலை அதிகமாக வீசுகிறது. சென்னை அணி செல்லும் மைதானங்கள் எல்லாம் மஞ்சளாக காட்சி அளித்து அனைத்து மைதானங்களையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தைப் போல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உணர வைத்துக் கொண்டுள்ளனர். தோனி களத்திற்கு வந்தாலே மைதானம் எங்கும் தோனி... தோனி... என்ற ரசிகர்களின் கோஷங்கள் மைதானத்தை அதிர வைக்கின்றன.
நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி, தனி சாம்ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரே அவரது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லக்னோ - சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றில் தோனியின் ஓய்வு குறித்து வர்ணனையாளர் கேள்விக்கு பதில் அளித்த தோனி, “இது எனது கடைசி ஐபிஎல் போட்டி அல்ல; இது என்னுடைய கடைசி ஐபிஎல் போட்டி என நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள்” எனக் கூறினார்.
தோனிக்கான இந்த வரவேற்பு எப்போதும் இருப்பதுதான் என்றாலும் 2016 ஆம் ஆண்டு தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி’ வெளியான பின் தோனி உடனான ரசிகர்களின் பிணைப்பு இன்னும் இறுக்கமானது. படம் வெளியாகி எங்கும் நேர்மறை விமர்சனங்களைப் பெற்று பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தை அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வரும் 12 ஆம் தேதி மீண்டும் திரையிடப் போவதாக அறிவித்துள்ளது.