பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, தாமதமாக பந்து வீசிய காரணத்திற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13-வது ஐபிஎல் தொடரின் ஆறாம் நாளான நேற்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 132 ரன்களை குவித்தார். பெங்களூரு அணி சார்பில் சிவம் டுபே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, முன்னணி வீரர்களின் ஆட்டம் சொதப்பலாக அமைய, 17-வது ஓவரின் முடிவில் பெங்களூரு அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இப்போட்டியின்போது, பெங்களூரு அணி கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் பந்து வீசாமல் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் அவ்வணியின் கேப்டனான விராட் கோலிக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.