உலகக் கோப்பை 2023-ன் 16வது லீக் போட்டி இன்று பிற்பகல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவு வாயில் மற்றும் மைதானத்தின் சுற்றுச் சுவர்களில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் அறிவிப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அரசியல், மதம் மற்றும் சாதி தொடர்பான வாசகங்கள் எழுதிய பதாகைகளுக்கு அனுமதி கிடையாது. அதேபோல், மதம் தொடர்பான கோஷங்களை எழுப்பக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. மாலை 4.55 மணி நிலவரப்படி நியூஸிலாந்து அணி 177 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்துள்ளது.
சமீபத்தில் குஜராத் மாநிலம், அகமதாபாத் பகுதியில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய ரசிகர்கள் சிலர் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யில் புகார் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.