Skip to main content

தொடரை கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து; சொந்த மண்ணில் தோற்ற இந்தியா!

Published on 26/10/2024 | Edited on 26/10/2024
New Zealand made history by winning the series

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று (26-10-24) நடைபெற்றது. இந்தப் போட்டியில், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து, பேட்டிங் செய்த இந்திய அணி 156 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸ் போட்டி நடைபெற்றது. அந்த அணியில், விளையாடிய கேப்டன் டாம் லாதம் அதிகப்பட்சமாக 86 ரன்கள் எடுத்தார். மேலும், கிளன் பிளிப்ஸ் 48 ரன்களும், டாம் பிளண்டல் 41 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக பவுலிங் செய்த இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே போல், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்கிஸில் நியூசிலாந்து அணி மொத்தமாக 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, பேட்டிங் செய்த இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா 42 ரன்களும், ஷுப்மன் கில் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து தொடரை கைவிட்டது. 

இந்தியா அணிக்கு எதிராக பவுலிங் செய்த நியூசிலாந்து அணியின் மிட்செல் சாண்ட்னர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேபோல், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும், கிளன் பிளிப்ஸ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இறுதியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடர் தோல்வியின் மூலம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.