எப்போதும் மற்ற அனைத்து அணிகளுடனும் தனது வியூகத்தால் வெற்றி பெரும் சென்னை அணி, மும்பை அணியுடன் மட்டும் தடுமாறி வருவது வாடிக்கையாகிவிட்டது. சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய கடந்த 19 போட்டிகளில் இரு முறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அது மும்பை அணியுடன் மட்டுமே. நேற்றைய சென்னை அணியின் தோல்வி, 2015-ஆம் ஆண்டுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் அடைந்த முதல் தோல்வி.
இந்த தொடரில் மட்டுமல்லாது ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணி மும்பை அணியுடன் அதிக தோல்விகளை சந்தித்துள்ளது. சென்னை அணியின் கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் 2010-ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை அணி மும்பை அணியுடன் வெற்றி பெறவில்லை. இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டியில் மும்பை அணியும், 2 போட்டியில் சென்னை அணியும் வென்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் நம்பர் 1 அணியாக வலம்வரும் சென்னை அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. மும்பை அணியுடன் விளையாடிய இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டிகளில் முதல் பேட்டிங்கில் மும்பை அணி குறைந்த ரன்களை எடுத்தாலும், இரண்டாவது இன்னிங்க்ஸில் ரோஹித்தின் கேப்டன்சியினாலும், மும்பை அணியின் அசத்தலான பவுலிங்காலும் சென்னை அணி குறைந்த ரன்களுக்கு அவுட்டாவது அடிக்கடி நடந்து வருகிறது.
2013-ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் மும்பை அணி முதல் பேட்டிங்கில் 148 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 125 மட்டுமே எடுக்க முடிந்தது. 2013-ஆம் ஆண்டு முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய சென்னை அணி வெறும் 79 ரன்கள் மட்டுமே எடுத்தது,
இந்த ஆண்டு இரு போட்டிகளிலும் மும்பை அணி முதல் இன்னிங்க்ஸில் 170 மற்றும் 155 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்க்ஸில் சென்னை அணி 133 மற்றும் 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இது போன்ற அனைத்து போட்டிகளிலும் சென்னை அணியின் டாப் ஆர்டர் விக்கெட்களை விரைவாக வீழ்த்தியது மும்பை. சென்னை அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த 5 போட்டிகளில், 4 போட்டிகள் மும்பை அணியுடன் என்பது கவனிக்கத்தக்கது.
பெரும்பாலான கேப்டன்கள் ரெகுலர் பவுலர்களையும், தனது அணியின் சிறந்த பவுலரையும் இதுபோன்ற போட்டிகளில் முதல் சில ஓவர்களை வீச செய்வது இயல்பு. ஆனால் ரோஹித்தின் கேப்டன்சி முற்றிலும் வேறுபட்டது. மைதானத்தின் தன்மை, பவுலர்களின் பிளஸ் மற்றும் மைனஸ், பேட்ஸ்மேன்களின் பிளஸ் மற்றும் மைனஸ் ஆகியவற்றை கணக்கில் கொண்டு சில புது முயற்சிகள் மேற்கொள்வார். பெரும்பாலான சமயங்களில் அந்த வியூகம் அவருக்கு கைகொடுத்து வருகிறது. டி20 போட்டிகளில் அவரின் கேப்டன்ஷிப் ஸ்கில் மிகவும் சிறப்பாக உள்ளது.
தல தோனியை சென்னை அணி அதிகளவில் நம்பியுள்ளது என்பதை இந்த தோல்வி மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. தோனி இல்லாமல் இந்த சீசனில் விளையாடிய சென்னை அணி இரு போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த போட்டி தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.