இந்திய மகளிர் அணியின் பேட்ஸ்வுமன் மித்தாலி ராஜ் டி20 போட்டிகளில் இந்திய அளவில் அதிக ரன்களை குவித்து சாதனைப்படைத்துள்ளார். இவரின் இந்த சாதனை மகளிர் அணியைத் தாண்டி ஆண்கள் அணியையும் விஞ்சியுள்ளது.
அயர்லாந்து அணியுடன் கடந்த வியாழக்கிழமை இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி அயர்லாந்து அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் மித்தாலி ராஜ் 51 ரன்களை எடுத்தார். இவரின் இந்த 51 ரன்னுடன் சேர்த்து டி20 போட்டியில் அவரின் மொத்த ரன்கள் 2283. இந்திய அளவில் ஆண் மற்றும் பெண் வீரர்களுடன் ஒப்பிடுகையில் மித்தாலி ராஜ்தான் அதிக ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
இதுவரை ஆண்கள் டி20-யில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் நியூஸிலாந்து அணியை சேர்ந்த மார்ட்டின் குப்ட்டில் 2271 ரன்களுடன் முதல் இடத்திலும், இந்திய அணியின் ரோஹித் ஷர்மா 2207 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் மற்றும் விராட் கோலி 2102 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.
மகளிர் டி20-யில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் நியூஸிலாந்து அணியை சேர்ந்த சுசீ பேட்ஸ் 2996 ரன்களுடன் முதல் இடத்திலும், இந்திய அணியை சேர்ந்த மித்தாலி ராஜ் 2283 ரன்களுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள்.
ஆண் மற்றும் பெண் டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்களின் பட்டியல் கணக்குப்படி நியூஸிலாந்து மகளிர் அணியை சேர்ந்த சுசீ பேட்ஸ் 2996 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக அதே நியூஸிலாந்து ஆண்கள் அணியை சேர்ந்த மார்ட்டின் குப்ட்டில் 2271 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அடுத்ததாக பெண்கள் அணியில் உலக அளவில் இந்திய அணியின் மித்தாலி ராஜ் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
இந்திய அளவில் ஆண் மற்றும் பெண் டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக அதிக ரன்கள் பட்டியலின் கணக்குப்படி, கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் புகழப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இருவரையும் பின்னுக்குத்தள்ளி மித்தாலி ராஜ் முதலிடத்தில் இருக்கிறார். இனி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகளிர் அணியையும் சேர்த்துதான் இந்திய கிரிக்கெட்டைப் பற்றி பேச வேண்டும்.
மித்தாலி ராஜ் 85 போட்டிகளில் 80 இன்னிங்ஸ் விளையாடி 2283 ரன்கள்.
ரோஹித் ஷர்மா 87 போட்டிகளில் 80 இன்னிங்ஸ் விளையாடி 2207 ரன்கள்.
விராட் கோலி 62 போட்டிகளில் 58 இன்னிங்ஸ் விளையாடி 2102 ரன்கள்.