13-வது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 132 ரன்களைக் குவித்தார். பெங்களூரு அணி சார்பில் சிவம் டுபே இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, முன்னணி வீரர்களின் ஆட்டம் சொதப்பலாக அமைய, 17-வது ஓவரின் முடிவில் பெங்களூரு அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதனையடுத்து, ஆட்டநாயகன் விருது கே.எல்.ராகுலிற்கு வழங்கப்பட்டது. 69 பந்துகளில், 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 132 ரன்களைக் குவித்ததன் மூலம் கே.எல்.ராகுல் இரண்டு புதிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
கே.எல். ராகுல் 132 ரன்கள் எடுத்ததன் மூலம் அது, ஐபிஎல் தொடரில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்சம் என்ற சாதனையாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட், ஹைதராபாத் அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்ததே, இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்சமாக இருந்தது.
மேலும் இந்த 139 ரன்களானது, ஐபிஎல் கேப்டன்களின் தனிநபர் அதிகபட்சம் என்ற சாதனையையும் கே.எல்.ராகுல் வசமாக்கியுள்ளது. இதற்கு முன்பு ஹைதராபாத் அணியின் கேப்டனான டேவிட் வார்னர், கொல்கத்தா அணிக்கு எதிராக 126 ரன்கள் குவித்ததே ஐபிஎல் கேப்டன்களின் அதிகபட்சமாக இருந்தது.