போட்டி முடிந்ததும் தோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன் என கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்தார்.
13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் 21-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தோனி 17-வது ஓவரில் ஆட்டமிழந்தது திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி 5 ரன்கள் விட்டுக்கொடுத்து தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி தமிழகத்தை சேர்ந்த வீரர் ஆவார். தோனியின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து வருண் சக்கரவர்த்தி நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
அதில் அவர், "கடந்த காலங்களில் சேப்பாக்கம் மைதானத்திற்கு தவறாமல் செல்வேன். பார்வையாளராக அமர்ந்து தோனியின் ஆட்டத்தை ரசித்திருக்கிறேன். இப்போது அவருக்கு எதிராக பந்து வீசுகிறேன். தோனி சிறப்பாக நிலைத்து நின்று விளையாடினார். துல்லியமாக பந்து வீசினால் அவர் விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தேன். நான் நினைத்தபடியே செய்யவும் முடிந்தது. போட்டி முடிந்தவுடன் தோனியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். நான் தமிழில் ஒன்றைக் கூற ஆசைப்படுகிறேன். தல என்றுமே தலதான்" எனப் பேசினார்.