Skip to main content

“கே.எல்.ராகுல் உள்ளே.. இவர்கள் வெளியேவா?” – ட்விட்டரில் ரசிகர்கள் ஆதங்கம்

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர், நியூசிலாந்தில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். டி20 அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்த்த சுரேஷ் ரெய்னா அணியில் இடம்பெறவில்லை. ஒருநாள் தொடரிலிருந்து ரிஷாப் பண்ட் நீக்கப்பட்டுள்ளார்.  இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இடம்பெறாதது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

 

 

ra

 

 

டி20 போட்டிகளில் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படும் சுரேஷ் ரெய்னா, சமீபகாலமாக டி20  போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெறாமல் ஒதுக்கப்பட்டு வருகிறார். கடந்த வருடங்களில் பார்ம் அவுட் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சையத் முஸ்தாக் அலி கோப்பையில் சதம் அடித்து மீண்டும் தன்னை நிரூபித்தார். இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் டிராபி தொடரில் மீண்டும் அணியில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு நடந்த அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் ஓரளவு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த வருடத்தில் 13 டி20 போட்டிகளில் 298 ரன்கள் எடுத்து 143.96 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார். 

ரிஷாப் பண்ட் தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். டி20 போட்டிகளில் இந்திய அணியில் இடம்பிடித்தாலும், ரிஷாப் பண்ட் ஒருநாள் போட்டிகளில் நீக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடாத காரணத்தால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள் அணியில் இடம்பெறவில்லை. விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்ட போதும் பேட்டிங்கில் எதிர்பார்த்த  அளவிற்கு பங்களிக்கவில்லை. இதுவரை 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணியுடனான டி20 போட்டிகளில் மணீஷ் பாண்டே ஒரு போட்டியில்கூட இடம்பெறவில்லை. நியூசிலாந்து ஏ அணியுடனான தொடரில் இந்தியா ஏ அணிக்கு விளையாடிய இவர் ஒரு சதம் உட்பட 158 ரன்கள், 52.67 சராசரி கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த ஆண்டு 13 டி20 போட்டிகளில் 299 ரன்ககள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணியுடன் 2015-2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் சதம் அடித்து, அணியை வெற்றி பெற வைத்தது மட்டுமல்லாது தொடரை வென்று சாதனை படைக்க உதவினார். இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மணீஷ் பாண்டே இந்திய அணியில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பட்டு வருகிறார். 

இந்தியா ஏ அணியின் கேப்டன்  ஸ்ரேயஸ் ஐயர் வரவிருக்கும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் இடம் பெறாமல் ஒதுக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகள் மற்றும் நியூசிலாந்து ஏ அணியுடன் சிறப்பாக விளையாடியுள்ளார். நியூசிலாந்து ஏ அணியுடன் ஒரு சதம் உட்பட 317 ரன்கள் எடுத்தார். இதுவரை 6 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதம் உட்பட 42 சராசரி, 210 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தாலும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். 

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், சுரேஷ் ரெய்னா ஆகியோர் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக அணியில் இடம் பெறாமல் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். தினேஷ் கார்த்திக், அம்பதி ராய்டு, கேதர் ஜாதவ் ஆகியோர் இவர்களின் இடத்தை ஒருநாள் போட்டிகளில் நிரப்பியுள்ளனர்.