2018-ல் விராட் கோலி வேறு ஒரு நபராக மாறியிருந்தார் எனக்கூறி ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை படைத்தார். தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அணி 2014 மற்றும் 2018-ம் ஆண்டு மேற்கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை ஒப்பிட்டு, அதில் விராட் கோலியின் ஆட்டத்திறன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "2014-ம் ஆண்டு அவருக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி அதில் வெற்றியும் கண்டேன். ஆனால் 2018-ம் ஆண்டு அவர் முற்றிலும் வேறு ஒருவராக மாறியிருந்தார். அது நம்ப முடியாத வகையில் இருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு எதிராக பந்து வீச கடினமாக இருந்தது. எந்தவொரு பந்துவீச்சாளரும் சிறப்பான பேட்ஸ்மேனுக்கு எதிராக பந்து வீச ஆசைப்படுவார்கள். எனக்கும் அவருக்கு எதிராக பந்து வீச பிடித்திருந்தது. அவர் மிகவும் பொறுமையானவராக மாறியிருந்தார். ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளைத் தொடாமல் தவிர்த்து வந்தார். அதன் மூலம் நீண்ட நேரம் களத்தில் நீடித்து நின்றார். அவரது ஆட்டத்திற்கான சரியான தொடக்கம் அமைந்துவிட்டால், அதிரடியாக விளையாட ஆரம்பித்துவிடுவார். மனதளவிலும், பந்தை எதிர்கொள்வதிலும் அவரது ஆட்டத்திறன் மெருகேறியிருந்தது" என்றார்.