ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே நடைபெறவுள்ளது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் வைத்து நடக்க இருக்கிறது.
இந்த இரண்டு அணிகளும் ஏப்ரல் 20ஆம் தேதி முதன்முதலாக மோதியபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக சிறப்பாக ஆடி வெற்றியும் பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 106 ரன்கள் அடித்து, இந்த சீசனின் முதல் சதத்தைப் பதிவு செய்தார்.
அதன்பிறகு, நிறையவே போட்டிகள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இரண்டு அணிகளும் வெவ்வேறு நிலையில் இருக்கின்றன. சென்னை அணிக்கு இன்னமும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றால் போதும். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு அப்படியல்ல. இனிவரும் எல்லா போட்டிகளிலுமே வெற்றிபெற்றாக வேண்டும்.
சீசன் தொடங்கியபோது இருந்ததைப் போல அல்லாமல், ராஜஸ்தான் அணியில் நிறையவே மாறியிருக்கிறது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் பட்லர் அரைசதம் விளாசி இருக்கிறார். ஜோஃப்ரா ஆர்ச்சர், கிருஷ்ணப்பா கவுதம் போன்ற வீரர்கள் அந்த அணியின் வேகத்தைக் கூட்ட, நியூசிலாந்து அணியின் இஷ் சோதியும் பார்ட்டியில் இணைந்திருக்கிறார். ஆனால், இன்னமும் ஒரு சிலர் மட்டுமே போட்டி மொத்தத்தையும் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருந்து அந்த அணி மீளவில்லை.
சென்னை அணிக்கு அப்படியல்ல.. அந்த அணி களமிறங்கிய பல போட்டிகளில் வெவ்வேறு வீரர்கள் வெற்றிபெறக் காரணமாக இருந்திருக்கிறார்கள். டெத் ஓவர் என்ற பெரிய குறையையும் அந்த அணி களைந்திருக்கிறது. டேவிட் வில்லி அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி பின்க் ஜெர்சி அணிந்து களமிறங்குகிறது. போட்டியில் வெற்றிபெறுவது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஃப்ளெமிங், ‘ரஹானே மிகச்சிறந்த வீரர். நிதானமாக தொடங்கினாலும் சட்டென போக்கை மாற்றிக்கொண்டு சுலபமாக ரன்குவிப்பில் ஈடுபடக் கூடியவர். ஒருவேளை அவர் தனது விக்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டால், மிடில் ஆர்டரில் இறங்கும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் போன்ற வீரர்களால் ஸ்கோர்போர்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழலாம். அதனால், ரஹானே விக்கெட்டை முதலிலேயே தூக்குவதுதான் எங்கள் திட்டம். ஒரு அணியின் கேப்டனை உடனடியாக தூக்கிவிட்டால் எல்லாமே நமக்கு சாதகமானதாகி விடும்தானே’ என தெரிவித்துள்ளார்.