ஒருவழியாக இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதன் பாதையை சரியாக தீர்மானித்திருக்கிறது. முதன்முறையாக ஓப்பனிங் இணை ஓரளவிற்கு நேர்த்தியான தொடக்கத்தைக் கொடுத்தது. அதற்கடுத்தபடியாக வந்த வீரர்களும் போதுமான அளவிற்கு தவறுகளைச் சரிசெய்திருந்தனர்.
அதேசமயம், பந்துவீச்சு பகுதியும் எதிரணிக்கு நெருக்கடியைக் கொடுக்கத் தவறவில்லை. குறிப்பாக, இடதுகை பேட்ஸ்மென்களைத் திணறடித்த இஷாந்த் சர்மாவின் அனுபவம் அதிக பாராட்டைப் பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் விக்கெட் எடுக்கத் தவறினாலும், இந்திய சுழல் தேவையைப் பூர்த்தி செய்ய அவரே போதுமானவராக இருக்கிறார். அதனால், குல்தீப்பிற்கும் ஓய்வளிக்கப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருக்கிறார்.
ஆல்ரவுண்டர் பாண்டியா மீதான விமர்சனங்களை, ஐந்து விக்கெட் வீழ்த்தி சரிசெய்து கொண்டார். முகமது ஷமி மட்டுமே இப்போதைக்கு கொஞ்சம் ஏற்ற இறக்கங்களுடன் நீடிக்கிறார். இந்தத் தொடரின் முதல் டெஸ்டில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியது மட்டுமே அவரது மிகச்சிறந்த இன்னிங்ஸ். ஆக, அவரை வெளியில் அனுப்பிவிட்டு, அந்த இடத்தை யார் நிரப்பப்போகிறார் என்ற எதிர்பார்ப்புதான் இப்போது வலுத்து வருகிறது.
ஒருவேளை ஷமிக்கு பதிலாக ஒருவரை இறக்கலாம் என்றால், உமேஷ் யாதவ் மற்றும் ஸ்ரதுல் தாகூர் ஆகியோர் லிஸ்டில் இருக்கின்றனர். ஸ்ரதுல் தாகூருக்கு இதுவே முதல் டெஸ்ட் என்பதால், நெருக்கடியான சூழலில் அவரை இறக்குவதற்கு கோலி ரொம்பவும் யோசிப்பார். அதனால், உமேஷ் யாதவ் அணியில் மீண்டும் சேர்க்கப்படலாம். உடல்தகுதியைக் காரணமாக அவருக்கு ஓய்வு வழங்கியது, இப்போது பெரும் பலனாக மாறியிருக்கிறது. அந்த நான்காவது பவுலர் உமேஷ் யாதவ்வாக இருக்கலாம்.