இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு போட்டிகளுக்கு எப்போதுமே உலக அளவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். கிரிக்கெட்டை தாண்டி எந்த விளையாட்டுகளில் இவ்விரு நாட்டு அணிகளும் மோதினாலும், அந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்லும். அதுவும் இந்த போட்டிகள் இந்தியா அல்லது பாகிஸ்தான் நாட்டில் நடந்தால், உள்ளூர் ரசிகர்களின் ஆரவாரத்தோடு சிறப்பாக நடைபெறும்.
ஆனால் சமீப காலங்களில் இந்திய கிரிக்கெட் அணி உட்பட, எந்த இந்திய விளையாட்டு வீரர்களும் பாகிஸ்தானில் சென்று விளையாடுவது இல்லை. பாதுகாப்பு காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் செல்லாமல் இருந்த நிலையில், அடுத்த மாதம் இந்திய டென்னிஸ் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டேவிஸ் கோப்பை தொடருக்கான போட்டிகள் வரும் செப்டம்பர் 14,15 ஆகிய தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக இந்தியா சார்பாக 6 வீரர்கள், உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பாகிஸ்தான் செல்ல உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
55 ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் முதன்முறையாக இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய டென்னிஸ் அணியின் பாகிஸ்தான் பயணத்தால் இந்திய டென்னிஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.