Skip to main content

சோயிப் மாலிக்கை மாமா என்றழைத்த இந்திய ரசிகர்கள்! (வீடியோ)

Published on 24/09/2018 | Edited on 24/09/2018
malik

 

 

 

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஷாவை காதலித்து மணமுடித்துக் கொண்டவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக். அதுமட்டுமின்றி, தனது அதிரடியான ஆட்டத்தால் இந்தியாவிலும் ரசிகர்களைக் கொண்டவர் அவர். அந்தவகையில், ஆசிய கோப்பை போட்டியிலும் இந்திய ரசிகர்கள் மாலிக்கிடம் அன்பைக் காட்டிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
 

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின், சூப்பர் 4 சுற்றில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொதப்ப, சோயிப் மாலிக் மற்றும் சர்ஃபராஸ் அகமது இணை சிறப்பாக ஆடியது. இதன்மூலம், 237 ரன்களை அந்த அணி குவித்தது. இருப்பினும், ரோகித் சர்மா மற்றும் சிகர் தவான் ஆகியோர் சதமடித்து இந்திய அணியின் அபார வெற்றிக்கு வித்திட்டனர். 
 

இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த இன்னிங்ஸின்போது, பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தார் சோயிப் மாலிக். அப்போது, மாலிக்கின் பின்புறம் இருந்த இந்திய ரசிகர்கள் மாலிக்கை நோக்கி, ஜீஜூ.. ஜீஜூ என்று செல்லமாக அழைத்தனர். மாலிக்கும் அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பின்னால் திரும்பி கைகளை அசைத்தார். ஜீஜூ என்றால் அக்காவின் கணவர் அல்லது மாமா என்று பொருள்படும். இந்த ருசிகர சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.