ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் ரோஹித் ஷர்மா, தவான், கோலி, ராயுடு, தோனி ஆகியோர் உலகக்கோப்பை அணியில் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர். ஆனால் இவர்களில் ஒருவர்கூட பந்துவீசுவதில்லை. அதேபோல பும்ரா, சமி, குல்தீப், சாஹல் போன்ற பவுலர்கள் பேட்டிங்கில் பங்களிப்பு அளிப்பதில்லை. புவனேஷ் மட்டும் ஓரளவு பேட்டிங்கில் பங்களிப்பார்.
5 பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதில்லை. பந்து வீசும் 4 வீரர்கள் பேட்டிங் செய்வதில்லை. பேக்அப் பேட்ஸ்மேன்களான ராகுல், பண்ட் ஆகியோரும் பேட்டிங் மட்டுமே விளையாடுவார்கள். கேதர் ஜாதவ் பார்ட் டைம் பவுலராக செயல்பட்டு வருகிறார். நான்கு பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்ரவுண்டர் அணியில் இடம்பெறும் நிலையில் 6-வது பந்து வீச்சாளராக பார்ட் டைம் பவுலர் ஒருவர் மட்டுமே இருப்பது இந்திய அணிக்கு பலவீனமாக அமையும்.
தற்போது ஹர்திக் பாண்டியா மட்டுமே இந்திய அணியில் பெயர் சொல்லும்படி ஆல்ரவுண்டராக இருக்கிறார். விஜய் சங்கர் பேக்அப் ஆல்ரவுண்டராக உள்ளார். ஜடேஜா அணியில் இடம்பெற்றால் பவுலிங் ஆல்ரவுண்டராக விளையாடுவார்.
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், நம்பர் 1 பவுலர் என மாஸ் காட்டும் இந்திய அணி ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் சிறப்பாக இல்லை. பேட்டிங் தரவரிசை பட்டியலில் கோலி, ஷர்மா, தவான் என முதல் 15 இடங்களில் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். அதேபோல பந்துவீச்சில் பும்ரா, குல்தீப், சாஹல் என 3 பேர் உள்ளனர். ஆனால் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் 15-ல் ஒருவர்கூட இந்திய அணி வீரர் இல்லை.
இந்திய அணியை தவிர மீதமுள்ள 10 அணிகளின் வீரர்கள் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் முதல் 15 இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து-4, ஆப்கானிஸ்தான்- 2, பாகிஸ்தான்-2, தென் ஆப்பிரிக்கா-1, ஆஸ்திரேலியா-1, இலங்கை-1, ஜிம்பாவே-1, வெஸ்ட் இண்டீஸ்-1, நியூசிலாந்து-1, பங்களாதேஷ்-1 என முதல் 15 ஆல்ரவுண்டர் இடங்களை இந்த 10 அணியின் வீரர்கள் பிடித்துள்ளனர்.
ரஷித் கான், முஹம்மது நபி ஆகியோரின் பங்களிப்பின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி முன்னேறி சிறந்த அணியாக மாறி வருகிறது. இங்கிலாந்து அணியில் மொயின் அலி, க்ரிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், பேன் ஸ்டோக்ஸ் என ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு தான் உலகின் நம்பர் 1 இடத்திற்கு காரணமாக உள்ளது.
இந்திய அணியில் இதுவரை பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராக கலக்கியது கபில் தேவ் மட்டுமே. 225 போட்டிகளில் 3783 ரன்கள், 253 விக்கெட்கள் எடுத்துள்ளார். இந்திய அணிக்கு பல ஆல்ரவுண்டர்கள் விளையாடினாலும் ஒரு சில வருடங்கள் மட்டுமே அணிக்கு விளையாடி வருகின்றனர். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் போல அணியில் நிரந்தரமாக விளையாடுவதில்லை. அஜீத் அகர்கர், இர்பான் பதான் ஆகியோர் ஆல்ரவுண்டர் திறமை இருந்தும் முழுவதுமாக ஆல்ரவுண்டர்களாக ஜொலிக்கவில்லை. பின்னி, ரிஷி தவான் என சிலர் அணியில் இடம்பெற்றாலும் குறுகிய காலம் மட்டுமே விளையாடினர்.
2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி பல ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் விளையாடினாலும் அவர்கள் பங்களிப்பு அணிக்கு போதுமானதாக இல்லை. ஸ்டுவர்ட் பின்னி, ரிஷி தவான் ஆகியோர் மட்டுமே இந்திய அணியில் இடம் பிடித்த மீடியம் பாஸ்ட் ஆல்ரவுண்டர்கள். ஆனால் அவர்கள் அணியில் இடத்தை தக்கவைக்க முடியவில்லை.
உலகக்கோப்பைக்கு 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் காயம் காரணமாக பாண்டியா சில தொடர்களாக அணியில் இடம்பெறாமல் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. விஜய் சங்கர், ஜடேஜா ஆகியோர் ஆஸ்திரேலியா தொடரில் ஆல்ரவுண்டராக பங்களிப்பது இந்திய அணிக்கு மிகவும் அவசியமாக உள்ளது.