டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வத்தை ரசிகர்களிடம் மீண்டும் கொண்டுவரப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் திட்டமிட்டபடி இந்த இறுதிப்போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை இங்கிலாந்து தனது ரெட் லிஸ்டில் இணைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் வசிக்காதவர்களோ, பிரிட்டிஷ் குடிமக்களாக இல்லாதவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இங்கிலாந்து செல்லும் தேதியிலிருந்து 10 நாட்கள் முன்புவரை இந்தியாவில் இருந்திருக்கக் கூடாது.
இதனால் இந்திய அணி, இங்கிலாந்து சென்று விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேநேரம் சர்வதேச கிரிக்கெட் வாரியம், ரெட் லிஸ்ட்டில் நாடுகள் இருப்பதால் ஏற்படும் தாக்கம் குறித்து இங்கிலாந்து அரசுடன் பேசி வருவதாகவும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்ப்டனில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.