இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, நேற்று அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல்நாள் ஆட்ட நேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 233 ரன்களை எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று, களமிறங்கிய இந்திய அணி, அரை மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. மேற்கொண்டு வெறும் 11 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், நாதன் லயன் மற்றும் ஹேசல்வூட் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு, இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசி கிடுக்குப்பிடி போட்டனர். குறிப்பாக ஜஸ்பிரிட் பும்ரா, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் முன்னணி வீரர் ஸ்மித்தை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இரண்டுமுறை கேட்ச் வாய்ப்பிலிருந்து தப்பிய லபூஷனே மட்டும் ஒரு பக்கம் போராட, மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் லபூஷனேவும் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி 150 ரன்னுக்குள் சுருண்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், இறுதிக்கட்டத்தில் கேப்டன் டிம் பெயின் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். 99 பந்துகளில் 77 ரன்களை எடுத்து அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டிம் பெய்னின் ஆட்டத்தால், ஆஸ்திரேலியா அணி 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தனது சுழற்பந்து வீச்சால் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை திணறடித்த அஸ்வின், 4 விக்கெட்டுகளை அள்ளினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருந்தது. இந்திய வீரர்கள் இன்று 4 கேட்சுகளைத் தவறவிட்டனர். அந்த கேட்ச்சுகள் பிடிக்கப்பட்டிருந்தால் ஆஸ்திரேலிய அணியை 150 ரன்களுக்குள் சுருட்டிருக்கலாம்.
இதனைத் தொடர்ந்து, 53 ரன்களோடு இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள், ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 62 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. மயங்க் அகர்வால் 5 ரன்களுடனும், பும்ரா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ஜஸ்பிரிட் பும்ரா நைட் வாட்ச்மேனாக இறங்கியது குறிப்பிடத்தக்கது.