இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் முதல் இன்னிங்சில் 345 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய வீரர்களில் ஷ்ரேயாஸ் ஐயர் சதமடித்தார். கில் மற்றும் ஜடேஜா இருவரும் அரை சதமடித்தனர்.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள், வில் யங், டாம் லாதம் ஆகிய இருவரும் நிலைத்து நின்று சிறப்பாக ஆடினர். இவர்கள் இருவரையும் நேற்றைய நாளின் இறுதி வரை இந்திய பந்து வீச்சாளர்களால் வீழ்த்தமுடியவில்லை.
அதனைத்தொடர்ந்து மூன்றாம் நாளான இன்று, ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீச தொடங்கினர். இந்தநிலையில் சிறப்பாக ஆடிய வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத்தொடர்ந்து கேப்டன் வில்லியம்சனை 18 ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்த, நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. ஒருகட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய டாம் லாதம் 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக 296 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது.
இந்தியத் தரப்பில் அக்ஸர் படேல் ஐந்து விக்கெட்டுகளையும், அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அதிர்ச்சி தொடக்கம் கண்டது. சுப்மன் கில், ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. மயங்க் அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.