Skip to main content

பந்து வீச்சில் கலக்கிய இந்தியா; உலகக் கோப்பையில் செய்த புதிய சாதனை

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

India mixed in bowling A new record in the World Cup

 

உலகக் கோப்பையின் 29வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே லக்னோவின் பாரத ரத்னா ஶ்ரீஅடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கில் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்பு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் 4 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 40 ரன்களுக்கு 3  விக்கெட்டுகளை இழந்து தவித்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழ மறுபக்கம் ரோஹித் சர்மா நிதானமாக ஆடினார். அவருடன் சேர்ந்த கே.எல். ராகுல் அணியை சரிவிலிருந்து மீட்டார். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ரோஹித் சர்மா அரை சதம் கடந்தார். நன்றாக ஆடிய ராகுல் 39 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

 

பின்பு கேப்டன் ரோஹித்துடன் சேர்ந்த சூர்யாவும் நிதானமாக ஆடினார். சதம் அடிப்பார் ரோஹித் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், 87 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஜடேஜா எட்டு ரன்களிலும், சமி 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். சூரியகுமாருக்கு, பும்ரா துணை நின்று ரன்கள் சேர்க்க சூரியகுமார் பொறுமையாக ஆடினார்.  அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யா குமார் யாதவ், சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு 49 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் பும்ரா மற்றும் குல்தீப்பின் கடைசி கட்ட இன்னிங்ஸ் உதவியுடன் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் ரஷித் 2 விக்கெட்டுகளும் மார்க் வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர்.


பின்னர் 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் அதிரடியாக ஆடத் தொடங்கினார். இருப்பினும் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சால் கிளீன் போல்ட் ஆனார். அடுத்து வந்த ரூட்டும் ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் ஆனார். மறுபுறம் வேகப்பந்து வீச்சாளர் சமி, ஸ்டோக்ஸ் மற்றும் பேர்ஸ்டோ இருவரையும் சிறிய இடைவெளியில் அவுட் ஆக்கினார். சிறிது நேரம் பொறுமையுடன் ஆடிய கேப்டன் பட்லரை குல்தீப் கிளீன் போல்ட் ஆக்கினார். குல்தீப் வீசிய பந்து 7.2° திரும்பி இந்த உலகக் கோப்பையின் மிகச் சிறப்பான ஒரு பந்தாக வர்ணிக்கப்பட்டது. அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, இறுதியில் இங்கிலாந்து அணி 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் மட்டும் 27 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்து வீசிய சமி 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்தனர். நெருக்கடியான நிலையில் பொறுப்புடன் ஆடி 87 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

இந்த வெற்றியால் இந்திய அணி உலகக் கோப்பைகளில் அதிக முறை வெற்றி பெற்ற இரண்டாவது அணி (58) என்ற நியூசிலாந்து அணியின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளி, இரண்டாவது இடத்தை (59) பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா (73) முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி இதுவரை பங்கு பெற்ற உலகக் கோப்பை போட்டிகளில், லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறுமுறை வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன் 2015இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் போட்டியில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

 

India mixed in bowling A new record in the World Cup

 

இந்தப் போட்டியில் 87 ரன்கள் அடித்ததன் மூலம் ஒட்டுமொத்தமாக 18,000 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் ரோஹித் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக முறை (7) ஆட்ட நாயகன் விருது பெற்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பைகளில் அதிக முறை (9) ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரராக முதலிடத்தில் உள்ளார்.

 

- வெ. அருண்குமார்