Skip to main content

INDvsNED : நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Published on 12/11/2023 | Edited on 12/11/2023

 

IND vs NED : India wins by beating Netherlands

 

உலகக் கோப்பை தொடரின் 45 வது லீக் போட்டி இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 410 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 128 ரன்களை குவித்தார். கே.எல். ராகுல் 102 ரன்களும், ரோஹித் சர்மா 61 ரன்களும், கில், விராட் கோலி ஆகியோர் தலா 51 ரன்களும் எடுத்தனர்.

 

இந்த போட்டியில் இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் 50 ஓவர் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கே.எல். ராகுல் 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 102 ரன் கள் எடுத்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணிக்கு இந்திய அணி 411 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது.

 

இந்நிலையில் 411 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. பின்னர் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. நெதர்லாந்து அணி சார்பில் டேஜா நிடமனுரு 54 ரன்களும், சைப்ராண்ட் 45 ரன்களும், அக்கெர்மன் 35 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் பும்ரா, சிராஜ், குல்தீப், ரவிந்தர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்தனர்.  128 ரன்களை குவித்த ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். லீக் சுற்று முடிவில் இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.