உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து உடனான ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ருட் 887 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் 883 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் உள்ளார். இந்திய அணியில் ரிஷப் பண்ட் 758 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 729 புள்ளிகளுடன் 12வது இடத்திலும் விராட் கோலி 700 புள்ளிகளுடன் 14வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சில் இந்திய அணியின் அஷ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 829 புள்ளிகளுடன் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார். இந்திய அணியின் பும்ரா 772 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் ஜடேஜா 765 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்களில் இந்தியாவின் ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அஷ்வின் 352 புள்ளிகளுடன் உள்ளார். அக்ஸர் படேல் 310 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.