ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா வென்றுள்ளார்.
18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனிஷியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் மல்யுத்த விளையாட்டில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பஜ்ரங் பூனியா மற்றும் ஜப்பானின் டைச்சி டக்கடானி இடையே இறுதிப்போட்டி நடைபெற்றது. இருவருக்கும் இடையே நடந்த கடுமையான போட்டியில், பஜ்ரங் பூனியா 3 - 2 என்ற கணக்கில் வென்றுள்ளார். முதல் செட்டில் 6 - 0 என்ற கணக்கில் பூனியா முன்னிலை பெற்றார். ஆனால், இரண்டாவது செட்டில் 4 - 6 என்ற கணக்கில் தோற்க நேர்ந்தது. தொடர்ந்து இருவருக்கும் இடையே நடந்த கடுமையான போட்டியில், பஜ்ரங் பூனியா அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றி குறித்து பேசிய பஜ்ரங் பூனியா, ‘போட்டிக்கு முன்பாக சிறப்பாக விளையாட வேண்டும் என்றுதான் எண்ணினேன். ஆனால், டைச்சி என்னைத் தோற்கடித்தது ஏமாற்றமளித்தது. அப்போது சுஷில் குமார் மல்யுத்தத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்; தொடர்ந்து போராடு என ஊக்கமளித்தார். நம் தன்னம்பிக்கை வலுப்பெரும்போது வெற்றி சுலபமாகிறது என்பதை உணர்ந்தேன். சில மாதங்களுக்கு முன்னர் கிரிகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் டைச்சி டக்கடானி என்னைத் தோற்கடித்தார். நான் அவரை இப்போது பழிவாங்கிவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.