ஐபிஎல் தொடரின் 16 ஆவது சீசன் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளன. போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கப்படும் சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் தங்களது அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் காணொளிகளை இணையத்தில் பதிவேற்றி ஐபிஎல்லுக்கான ஹைப் ஏற்றுகின்றன. அதே வேளையில் ஏலத்தின் போது எடுக்கப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதும் மாற்று வீரர் அணியில் சேர்க்கப்படுவதுமான நிகழ்வுகளும் தொடர்கின்றன.
சென்னை அணியைப் பொறுத்தவரை கேப்டன் தோனிக்கு இது கடைசி ஐபிஎல்லாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதேசமயத்தில் அவர் இன்னும் 2 முதல் 3 சீசன்கள் விளையாடலாம் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சென்னை அணியில் நெடுங்காலமாக விளையாடிய சுரேஷ் ரெய்னா முதன்முறையாக தோனியை பார்த்த சம்பவத்தைப் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “ஜார்கண்ட்டில் இருந்து வந்துள்ள நீளமான தலைமுடியுள்ள வீரர் ஒருவர் அபாரமாக கிரிக்கெட் விளையாடுவதாகவும் மைதானத்திற்கு வெளியே பந்துகளை பறக்க விடுவதாகவும் கேள்விப்பட்டோம். ஒரு நாள் தோனி ஒரு ஓரத்தில் அமர்ந்து பட்டர் சிக்கன் மற்றும் ரொட்டி ஆகியவற்றை சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது தான் அவரை பார்த்தோம். எங்கள் அணியை சேர்ந்த ஒருவர், இவர் நம் அணிக்கு பாதிப்பு ஏற்படுத்துவாரா என எனக்குத் தெரியவில்லை. அவர் அவரது உணவை ரசித்து சாப்பிடுகிறார். அதையே தொடரட்டும் எனக் கூறினார். ஆனால் போட்டியின் போது தோனி குறித்து சொன்னவர் போட்ட பந்துகளை சிக்ஸர்களாக பறக்க விட்டார். அதன் பின்னர் தோனி பற்றி அப்படி கூறியவர் அந்த வார்த்தைகளைத் திரும்ப எடுத்துக் கொண்டார்” எனக் கூறினார்.