1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி, 1999-2001காலகட்டங்களில் தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி என்ற பல ஆதிக்கங்களுடனும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கே உரித்தான இறுமாப்புடனும் 2001-ஆம் ஆண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவில் விளையாட வந்தது அந்த அணி. அந்த தொடரில் இந்திய அணி படைத்த 2 வரலாற்று நிகழ்வுகள் ஆஸ்திரேலியா அணியின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.
நிகழ்வு 1: லக்ஸ்மன்-டிராவிட்டின் வரலாற்று சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப். நிகழ்வு 2: அனுபவமிக்க ஆஸ்திரேலியா அணியை திக்குமுக்காட வைத்த 20 வயதே ஆன ஒரு இளைஞனின் சுழல் பந்துவீச்சு. அந்த தொடரில் இந்திய அணி பவுலர்களில் அந்த இளைஞனை தவிர யாரும் 3+ விக்கெட்கள் வீழ்த்தவில்லை. ஆனால் அந்த இளைஞன் மட்டும் 32 விக்கெட்களை சாய்த்திருந்தான். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த ஸ்பின் பவுலரும் அந்த இளைஞன் தான். அப்போதைய ஸ்பின் ஜாம்பவான் வார்னே அந்த தொடரில் மொத்தமாக 10 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார்.
2001-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பு கும்ப்ளேவுக்கு காயம் ஏற்பட்டது. எந்த ஸ்பின் பவுலரை அணியில் சேர்ப்பது என்ற விவாதம் நடந்து கொண்டிருந்தது. கேப்டன் கங்குலி வெளிப்டையாகவே ஹர்பஜன் சிங்கை அணியில் சேர்க்க ஆதரவுக்கரம் நீட்டினார். அதற்கு முன்னர்வரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்கள் மட்டுமே எடுத்திருந்த சிங்கை கிங்காக மாற்றியது அந்த தொடர் தான்.
சர்ச்சை, அதிரடி, ஆக்ரோஷம், என்டர்டைன்மெண்ட் என ஹர்பஜன் சிங் மிகவும் பிஸியான ஒரு வீரராகவே வலம் வந்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் என இரண்டிலும் சிறப்பாக பங்களித்து வந்தார். டி20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பல மூத்த வீரர்கள் தடுமாறினார்கள். ஆனால் சிங் அந்த ஃபார்மேட்டிலும் அசத்தினார்.
பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசினார். கேப்டன்களின் நம்பிக்கைக்குரிய பவுலராக இருந்தார். பல போட்டிகளில் முதல் ஓவரை வீசினார். இடது கை பேஸ்ட்மேன்கள் இவரின் பந்து வீச்சில் திணறினார்கள். 38 வயதிலும் ஐபிஎல் போட்டிகளில் அசத்தி வருகிறார். மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துதல், விக்கெட்களை வீழ்த்துதல் என தனது பவுலிங் மூலம் அணிக்கு பெரிதும் உதவியுள்ளார்.
2010-ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 8-வது வீரராக களமிறங்கி அடுத்தடுத்து இரு சதம் அடித்து சாதனை படைத்தார். அந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 69, 115 ரன்கள் எடுத்து டிரா செய்ய முக்கிய காரணமாக இருந்தார். அடுத்த போட்டியில் 111 ரன்கள் எடுத்தார்.
இலங்கையில் 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி 170 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி ஹர்பஜன் வீசிய மாயாஜால சுழலில் 80 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 12 ரன்களுக்கு 4 விக்கெட்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார் சிங்.
ஐபிஎல் தொடர்களில் மும்பை அணியின் வெற்றிகள், 2007-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றி, 2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றி என பல வெற்றிகளுக்கு உதவியவர் ஹர்பஜன். இந்திய அணிக்கு கிடைத்த பெஸ்ட் ஆஃப் ஸ்பின்னரான சிங், கங்குலி தேர்ந்தெடுத்த மற்றுமொரு கிங். இன்று ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாள்.
ஹர்பஜன் பற்றி சில தகவல்கள்
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2001-ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இந்திய வீரராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.
ஆஃப் ஸ்பின்னராக டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்கள் எடுத்த முதல் இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.
2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வீரர் சைமண்ட்ஸ் உடன் வாக்குவாதம் மற்றும் அதே ஆண்டு இந்திய வீரர் ஸ்ரீசாந்த்தை அறைந்தது என சர்ச்சைகளில் சிக்கினார்.
2003-ஆம் ஆண்டு அர்ஜுனா விருது, 2009-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை பெற்றார்.
முதலில் பேட்ஸ்மேனாக சரஞ்சித் சிங்கிடம் பயிற்சி பெற்று வந்த நிலையில், பின்னர் தவேந்தர் சிங் என்பவர் மூலம் ஸ்பின் பவுலராக பயிற்சி பெற்றார்.
பிறந்த தேதி 3 என்பதால் தனது ஜெர்ஸி நம்பர் 3 வைத்துள்ளார்.
ட்ரெஸ்ஸிங் ரூமில் குறும்பாகவும், விளையாட்டாகவும் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்.
கங்குலி கேப்டன் பொறுப்பேற்ற பின்பு அணியில் மூத்த வீரர்கள், இளம் வீரர்கள் என அனைவரையும் சமமாக நடத்தியதாக கூறியிருந்தார்.
கங்குலி தன்னை மிகவும் வலிமைப்படுத்த உதவியுள்ளதாகவும், இக்கட்டான நிலையில் தன்னுடன் ஆதரவாக நின்றதற்காக அவருக்கு கடமைப்பட்டிருப்பதாகவும், கங்குலி செய்த நன்றியை வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது எனவும் ஹர்பஜன் பலமுறை தெரிவித்துள்ளார்.
பல சர்ச்சைகள், மைதானத்தில் ஆக்ரோஷம், தமிழ் மக்களை கவரும் விதமாக தமிழில் ட்விட் என தனது பாணியில் ஏதேனும் ஒன்றை செய்து கொண்டே இருப்பார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சிங். மும்பை, சென்னை அணிகள் கோப்பைகளை வென்றபோது மறைமுக ஹீரோவாக பங்களித்துள்ளார்.