கடந்த இரு மாதங்களாக அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐ.பி.எல் தொடரானது, தற்போது நிறைவு பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்ற மும்பை அணி, 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் பல இளம் வீரர்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தைப் பெற்றனர். அவர்களில் மிக முக்கியமானவர் சூர்யகுமார் யாதவ். மும்பை அணிக்காக 16 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், 4 அரை சதங்களுடன் 480 ரன்கள் குவித்தார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சூர்யகுமார் யாதவ் ஆட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "சூர்யகுமார் யாதவ் தன்னை மும்பை அணியில் முக்கியமான வீரராக மாற்றிக்கொண்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பேட்டிங்கில் கூடுதல் பொறுப்பை எடுத்துக்கொண்டார். அவர் பல வகையான ஷாட்டுகள் விளையாடுவதால் அவரைக் கட்டுப்படுத்த இயலாது. கவர் திசையில் நன்றாக விளையாடுகிறார். ஸ்வீப் வகை ஷாட்டுகளும் அடிக்கிறார். வேகப்பந்து வீச்சு, சுழற்பந்துவீச்சு என இரண்டிற்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இந்திய அணியில் அவரைத் தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. இந்திய அணியில் வாய்ப்பு என்பது அவருக்கு வெகுதூரம் இல்லை. சூர்யகுமார் யாதவ் இந்திய டிவில்லியர்ஸ்" எனக் கூறினார்.