34 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை ஏற்றுக்கொள்வதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நவி மும்பையில் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவானி என்ற குழந்தைகளுக்கான மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பங்கேற்றார்.
அதன்பின் பேசிய அவர், 34 ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவுகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். பல பிஞ்சு குழந்தைகள் வசதியில்லாததால் தங்கள் நோய்களை சரிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இதில் எனது பங்கும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என கவாஸ்கர் பேசினார்.
இதுகுறித்து பேசிய அந்த மருத்துவமனை தலைவர், "இந்தியாவில் ஆண்டுக்கு 2.4 லட்சம் குழந்தைகள் இதயக் கோளாறுகளுடன் பிறக்கின்றன. இதில் 40 சதவீதம் குழந்தைகள் தங்களின் 3-வது வயதை நிறைவடைதற்குள்ளாகவே இறந்துவிடுகின்றன. இப்படியொரு நிலையை மாற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும்" என தெரிவித்தார்.