கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனை ஒட்டி இரு அணிகளும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியில் பல வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்ட காரணத்தால் அவர்களுக்கு மாற்றாக புதிய வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில், “ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சித்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல், பரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட்” ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர்க்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து காரணமாக சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக ஸ்ரீகர் பரத்தும், பும்ராவுக்கு பதிலாக ஜெயதேவ் உனத்கட்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தோனி உடனான தனது உரையாடலை பரத் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அதில், “இங்கிலாந்து மைதானங்களில் தனது விக்கெட் கீப்பிங் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார். மிகச்சிறந்த உரையாடலாக அது அமைந்தது. உரையாடலில் பல முக்கிய அம்சங்கள் இருந்தன. விழிப்புணர்வுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு தோனிதான். விக்கெட் கீப்பிங்கில் அவரது விழிப்புணர்வு மிகச் சிறப்பான ஒன்று. உரையாடலின் போது தோனி, ‘விக்கெட் கீப்பின் என்பது அதிகம் பாராட்டப்படாத வேலை. டெஸ்ட் போட்டியின் 90 ஓவர்களில் ஒவ்வொரு பந்துக்கும் கவனமுடன் கீப்பிங் செய்ய வேண்டும். அந்த சவாலை ஏற்றுக்கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும்’” என தோனி கூறியதாக பரத் தெரிவித்துள்ளார்.