இங்கிலாந்தில் நூறு பந்துகள் வீசப்படும் கிரிக்கெட் தொடர் வரும் 2020ஆம் ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. ஏற்கெனவே டி20 போட்டிகளில் 120 பந்துகள் வீசப்பட்டு வரும் நிலையில், நூறு பந்துகள் மட்டுமே வீசப்படும் இந்த போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.
நூறு பந்துகள் மட்டுமே ஒரு போட்டியில் வீசப்படும் என்பதால், இந்தத் தொடருக்கு ‘தி ஹன்ட்ரட்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வழக்கமாக வீசப்படும் 15 ஓவர்களும் (ஒரு ஓவரில் ஆறு பந்துகள்), வழக்கத்திற்கு மாறாக ஒரேயொரு ஓவரில் மட்டும் 10 பந்துகளும் வீசப்படும். இந்தப் போட்டி வெறும் இரண்டரை மணிநேரம் மட்டுமே நடைபெறும் என்பதால், இளம் தலைமுறையினர் பலரைக் கவர்ந்துவிடவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சிக்கிறது.
இந்த தொடரில் களமிறங்குவதற்காக இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்டோரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் அதன் நட்சத்திர வீரர்களை ஐ.பி.எல். தவிர மற்ற போட்டிகளில் களமிறக்குவதில் அதிக கெடுபிடி காட்டுவதால், இதில் சிக்கல் இருக்கலாம் என தெரிகிறது. ஆனால்,‘தி ஹன்ட்ரட்’ தொடரின் தொடக்க சீசனில் மட்டும் இந்திய வீரர்கள் களமிறங்கினால், அந்தத் தொடருக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என எண்ணி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அந்தத் தகவல் தெரிவித்துள்ளது.