13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடரின் ஏழாவது நாளான நேற்று, சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களைக் குவித்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்தீவ் ஷா 43 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களைக் குவித்து, 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை அணி தரப்பில் டு பிளஸிஸ் அதிகபட்சமாக 43 ரன்களைக் குவித்தார். இத்தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணிக்கு, இது இரண்டாவது தோல்வியாகும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியிலும் சென்னை அணி தோல்வியைத் தழுவியிருந்தது.
தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அணியின் கேப்டன் தோனி பேசுகையில், "நேற்று பெரிய அளவில் பனிப்பொழிவு இல்லையென்றாலும், மைதானம் மெதுவாக இருந்தது. பேட்டிங்கில் சொதப்பியது வருத்தமளிக்கிறது. மெதுவான தொடக்கம் கிடைத்த பின், தேவையான ரன் விகிதம் அதிகரித்துக்கொண்டே போனது. இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தெளிவான திட்டமிடலோடு நாங்கள் மீண்டு வர வேண்டியுள்ளது. வீரர்கள் அனைவரும் சரியான ஃபார்மிற்கு வர வேண்டியது முக்கியம். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்கள் சரியான நிலைக்கு இன்னும் வரவில்லை" எனக் கூறினார்.