உலகின் மிகப்பெரிய தொடக்கம் கிடைத்த போட்டி எனும் வரலாற்றுச் சாதனையை சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல் தொடக்கப் போட்டி படைத்துள்ளது.
கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-ஆவது ஐ.பி.எல் தொடர் கடந்த 19-ஆம் தேதி அமீரகத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. ஐ.பி.எல் நடைபெறுமா என்பது குறித்து பெருத்த சந்தேகம் நீடித்து வந்த நிலையில், ஐ.பி.எல் தொடர் அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. மேலும் தோனியின் சர்வதேச ஓய்வு அறிவிப்பிற்குப் பிறகு, தோனி களம் காணும் முதல் போட்டி என்பதால் இப்போட்டி குறித்தான எதிர்பார்ப்பு புதிய உச்சத்தைத் தொட்டது.
எதிர்பார்ப்புகள் நிறைந்த அப்போட்டியில், சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் உலக அளவில் அதிக நபர்களால் பார்க்கப்பட்ட தொடக்கப்போட்டி என்ற சாதனையை, இப்போட்டி படைத்துள்ளது. பி.சி.சி.ஐ-யின் செயலாளர் ஜெய் ஷா, இந்தத் தகவலை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துளார்.
அதில் அவர், "ஐ.பி.எல் தொடக்கப் போட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது. பார்வையாளர் ஆராய்ச்சிக் குழுவின் தகவலின் படி 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இப்போட்டியைப் பார்த்துள்ளனர். உலகில் எந்த ஒரு போட்டிக்கும் இவ்வளவு பெரிய தொடக்கம் கிடைத்ததில்லை" எனப் பதிவிட்டுள்ளார்.
ஒட்டு மொத்த பார்வையாளர்கள் கணக்கீடு என்பது, தொலைக்காட்சி மற்றும் இணையம் வழியாகப் பார்த்தவர்களின் எண்ணிக்கையை வைத்துக் கணக்கிடப்பட்டுள்ளது.