16 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அணிகள் தொடர் வெற்றிகளைப் பெற கடுமையாகப் போராடி வருகின்றன.
கடந்த சீசன்களைப் போலவே இந்த சீசனிலும் சென்னை அணியின் கேப்டன் தோனி, அனைத்து அணிகளையும் அணி வீரர்களையும் விஞ்சி ரசிகர் பட்டாளத்துடன் தொடரின் நாயகனாக திகழ்கிறார். முன்னாள் வீரர்களும் பயிற்சியாளர்களும் தோனியைப் புகழ்ந்து வரும் நிலையில் முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும் சென்னை அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங், தோனியை புகழ்ந்துள்ளார்.
தனியார் கிரிக்கெட் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஹர்பஜன் சிங், “தோனியை விட பெரிய கிரிக்கெட் வீரர் இந்தியாவில் இருக்க முடியாது. அவரை விட யாரோ ஒருவர் அதிக ரன்கள் எடுத்திருக்கலாம்; அவரை விட அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கலாம்; ஆனால் அவரை விட பெரிய ரசிகர் பட்டாளம் யாருக்கும் இல்லை. தோனி இந்த ரசிகர்களை மனதார ஏற்றுக்கொண்டார். அவர் தனது சக வீரர்களையும் மதிக்கிறார். அவர் மிகவும் அன்புடனும் உணர்ச்சியுடனும் நடந்துகொள்கிறார். தோனி இந்த அன்பையும் உணர்ச்சியையும் 15 ஆண்டுகளாக தனது இதயத்தில் சுமந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து ஷிவம் துபேயின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், “ஷிவம் துபேயின் ஹிட்டிங் ரேஞ்ச் அபாரம். தவறான பந்துகள் எப்போதெல்லாம் வீசப்படுகிறதோ அதை பெரிய ஷாட்களாக மாற்றுகிறார். இத்தகைய குணங்களைக் கொண்ட வீரர்கள் மீது சிஎஸ்கே அதிக கவனம் செலுத்துகிறது. ஷிவம் துபே தொடர்ந்து டாப் ஆர்டரில் பேட் செய்வதற்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.