இன்று தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிற 13-வது ஐபிஎல் தொடரில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இக்கட்டுப்பாடுகளுக்கு இடைய நடைபெறும் போட்டிகள் ரசிகர்களுக்கு கிரிக்கெட் பார்க்கும் பழைய அனுபவத்தையும், உற்சாகத்தையும் தருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
13-வது ஐபிஎல் தொடரானது இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு அமீரகத்தில் தொடங்குகிறது. தொடக்க போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இத்தொடரை வெற்றியோடு துவக்கும் நோக்கோடு, முதல் வெற்றியைக் குறிவைத்து தீவிர பயிற்சியில் உள்ளனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே இத்தொடர் நடைபெறுவதால் பிசிசிஐ பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியிருக்கிறது.
அமீரகம் சென்றடைந்த வீரர்கள் அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பின் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று இல்லையென்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அதேபோல போட்டி நடைபெறும்போது, பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளையும் பிசிசிஐ கூடுதல் கவனம் கொண்டு உருவாக்கியிருக்கிறது.
அதன்படி, 'மைதானத்திற்குள் நுழையும் வரை அனைத்து வீரர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வீரர்கள் விக்கெட் வீழ்த்தும்போது ஒருவரையொருவர் கட்டியணைப்பதோ, கைகொடுப்பதோ கூடாது. இவ்விதியானது அணி கேப்டன்கள் டாஸ் போடும் போதும் பொருந்தும். சிக்ஸர் அடிக்கும்போது, ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமான நடன அழகிகளின் நடனம் இந்தாண்டு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல மைதானத்தில் நேரடியாக அமர்ந்து போட்டியைக் காண்பதற்கான வாய்ப்பு இந்தாண்டு ரசிகர்களுக்கு இல்லை. வீரர்களுக்கு குளிர்பானங்கள் எடுத்து வரும் நபர்கள் தங்கள் கைகளை நன்றாக சுத்தப்படுத்தி விட்டு எடுத்து வர வேண்டும். அதை வாங்கி அருந்தும் வீரர்களும், தங்கள் கையை சுத்தம் செய்துவிட்டு அருந்த வேண்டும்' எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.