இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஓல்டு ட்ரஃபோர்டு மைதானத்தில் வைத்து நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்று 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணி, குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கி வீழ்ச்சியைச் சந்தித்தது. நான்கு ஓவர்கள் வீசிய அவர் 24 ரன்களே கொடுத்து, முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ்வின் ரிஸ்ட் ஸ்பின்னிங் ஸ்டைல்தான் எங்கள் வீரர்கள் நிலைகுலையக் காரணம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நாளை கார்டிஃபில் நடக்கவிருக்கும் இரண்டாவது டி20 போட்டியில் வாழ்வா சாவா நிலையில் களமிறங்குகிறது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியிலும் குல்தீப் யாதவ் மூலம் தோல்வி ஏற்படாமல் இருக்க, அந்த அணி பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லர், ‘இடதுகை ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்வது கடினம்தான். அதேசமயம், குல்தீப் யாதவ்வை வீரர்கள் எதிர்கொள்வது இதுவே முதன்முறை. அதனால், மெர்லின் பவுலிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்கிறோம். இது மட்டுமே முழுமையாக பலனளிக்கும் என்று சொல்லமுடியாது. சில வீடியோக்கள், இரண்டு மூன்று போட்டிகளில் சூழல் எங்களுக்கு சாதகமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.