காயம் காரணமாக கடந்த போட்டியில் பாதியில் வெளியேறிய பிராவோ, இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
13-வது ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற இருக்கிற 37-ஆவது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 3 வெற்றிகள், 6 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தர வரிசைப்பட்டியலில் 7 -ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால், இனி வரவிருக்கிற அனைத்துப் போட்டிகளிலும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு சென்னை அணி உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த போட்டியில் காயம் காரணமாக பிராவோ பாதியில் வெளியேறியதால் அவரால் கடைசி ஓவரில் பந்து வீச முடியவில்லை. அதற்குப் பதிலாக ஜடேஜா வீசிய ஓவரில் சென்னை அணி வெற்றியைக் கோட்டை விட்டது. அந்த ஓவரை பிராவோ வீசியிருந்தால் முடிவு வேறு வகையில் இருந்திருக்கும் என சென்னை அணி ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் இது குறித்துப் பேசுகையில், காயத்தின் தன்மை தீவிரமாக இருக்கும்பட்சத்தில் அடுத்த சில போட்டிகளில் பிராவோ களமிறங்குவது சந்தேகம் எனத் தெரிவித்தார். இதனால் பிராவோ இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. வாழ்வா-சாவா நிலையில் வரவிருக்கிற போட்டிகளை எதிர்கொள்ளும் சென்னை அணிக்கு, பிராவோவின் காயம் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.