மத்திய அரசு சார்பில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களைக் கவுரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்படும். இவ்விருதானது இந்திய விளையாட்டுத்துறைகளிலேயே மிக உயரிய விருதாக கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு இவ்விருது பெறுவோர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அதில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரும், உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஹிட்மேன் என அன்போடு அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா பெயரும் இடம் பிடித்துள்ளது. இதன் மூலம் ரோஹித் ஷர்மா இந்த விருதினைப் பெறும் நான்காவது கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெறுகிறார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், தோனி, விராத் கோலி ஆகியோர் இவ்விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிசிசிஐ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை பெறும் உங்களுக்கு வாழ்த்துகள். உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம் ரோஹித் ஷர்மா" எனப் பதிவிட்டுள்ளது.
இந்தாண்டிற்கான விருதை ரோஹித் ஷர்மா உட்பட பாரா-தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் என மொத்தம் ஐந்து பேர் பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.