ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற வேறு எந்த இந்திய நிறுவனமும் முன்வராத பட்சத்தில் மட்டுமே பதஞ்சலி நிறுவனம் அதற்கு முயற்சிக்கும் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13வது ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளுக்கான ஸ்பான்சராக சீன நிறுவனம் விவோ இருந்து வந்தது. கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்தியா, சீனா இராணுவ மோதலையடுத்து சீன நிறுவனங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அதனையடுத்து இந்தாண்டிற்கு மட்டும் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக 'விவோ' அறிவித்தது. தற்போது புது ஸ்பான்சரை தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
பைஜுஸ், கொகோ கோலா உட்பட பல நிறுவனங்களுக்கு இடையே 'விவோ' இடத்தை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவிவருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னால் பதஞ்சலி நிறுவனமும் அந்தப் போட்டியில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியது. பின்பு அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் அதனை உறுதி செய்தார். தற்போது இது குறித்து கருத்து கூறியுள்ள பாபா ராம்தேவ், "சீன நிறுவனங்களின் இந்திய சந்தை ஆதிக்கத்தை அனுமதிக்கக்கூடாது. வேறு எந்த இந்திய நிறுவனமும் ஸ்பான்சராக முயற்சிக்காத பட்சத்தில் நாங்கள் பதஞ்சலி மூலம் அதைப் பெற முயற்சிப்போம்" என்றார்.