ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 27-ஆம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. ஒருநாள் தொடரையடுத்து, இருபது ஓவர் போட்டித் தொடரும், அதனையடுத்து டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன.
கடந்த சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை இந்திய அணி அதிரடியாகக் கைப்பற்றியதால் எதிர்வரவிருக்கும் தொடர் குறித்து எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "பும்ரா, ஷமி எவ்வளவு சிறந்த வீரர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அதே நேரத்தில் எங்கள் அணியிலும் எவ்வளவு சிறந்த வீரர்கள் உள்ளார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். டேவிட் வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளனர். பேட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் ஆட்டத்தை பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். இரு அணிகளையும் ஒப்பிட்டால் சில சிறந்த வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சில் இந்திய அணி வலுவாக உள்ளது. இது சுவாரசியமான போட்டிக்கு வழிவகுக்கும்" எனக் கூறினார்.