ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடரில் 13 போட்டிகள் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. 6 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று முடிவில் 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான், இலங்கை என இரு நாடுகளில் இந்த தொடர் நடைபெறும் என்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டுக்கான ஆசிய கோப்பை முழுவதுமாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தானில் போட்டிகள் நடந்தால் இந்தியா பங்கேற்காது என்றும் வேறு ஒரு நாட்டில் மாற்றி போட்டியை நடத்த வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கும் பிசிசிஐக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.
மேலும், இந்தியா பாகிஸ்தானில் விளையாடவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பாகிஸ்தான் விளையாடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பாகிஸ்தான் விளையாடும் 4 லீக் போட்டிகள் பாகிஸ்தானிலும் மற்ற 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.