2011-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்து வரலாற்றில் மோசமான தோல்வியை பதிவு செய்தது. அதற்கு பிறகு சச்சின், டிராவிட், லட்சுமணன், கம்பீர் போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இல்லாத நிலையில் 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றது இந்திய அணி.
முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் உலகின் டாப் கிளாஸ் டெஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் ஆகியோரின் பவுன்ஸர்கள், ஸ்விங், லென்த், சீம் பவுலிங் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தது. ஒருமுனையில் விக்கெட்கள் வரிசையாக விழுந்தது. 5வது வீரராக களமிறங்கிய ரஹானே மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்தார்.
தனது பொறுமையான பேட்டிங் மூலம் இங்கிலாந்து பவுலர்களுக்கு சவாலாக இருந்தார். அந்த போட்டியில் வெளிநாட்டில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார். அந்த போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது.
முதன்முறையாக 2011-ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார் ரஹானே. மூத்த வீரர்கள் அணியில் விளையாடி வந்ததால் 16 மாதங்கள் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
12-வது வீரராக இந்திய அணியில் தனது பணியை பாகுபாடு இன்றி செய்தார். 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம், தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடினார். முதல் போட்டியில் சரியாக விளையாடாத ரஹானே அடுத்த டெஸ்ட் போட்டியை 9 மாதங்களுக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடினார். அந்த தொடரின் முதல் போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்த ரஹானே அடுத்த இரு போட்டிகளில் 209 ரன்கள் விளாசினார்.
அணியில் விளையாடினாலும் விளையாடவில்லை என்றாலும் தனது பேட்டிங் திறமையை தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருந்தார். எந்த வித பாகுபாடு இல்லாமல், எந்த பேட்டிங் வரிசையிலும் இறங்குவதற்கும் தயங்கியதில்லை. கேப்டனாக இருந்தாலும், அணியில் ஒரு வீரராக இருந்தாலும், அணியில் விளையாடாமல் இருந்தாலும் முழு அர்ப்பணிப்போடு அணிக்காக எதையும் செய்து வந்தார்.
வாய்ப்பு கிடைக்கும் போது சரியாக பயன்படுத்தி வந்தார். டிஆர்எஸ் கேட்கும் போது சரியாக கணித்து கேட்டு வந்தார் ரஹானே. பெரும்பாலும் ரஹானே நிதானமாக விளையாடக்கூடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். ஸ்கோயர் கட், ஸ்ட்ரைட் டிரைவ், பேக் ஃபுட் ஷாட்கள் சிறப்பாக ஆடக்கூடியவர். சில சமயம் அப்பர் கட் ஷாட்களில் கலக்குவார்.
ரஹானே பற்றிய சுவாரசிய தகவல்கள்
இலங்கை அணிக்கு எதிராக 2015-ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் 8 கேட்ச்கள் பிடித்து அசத்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 2015-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணியுடன் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்ததன் மூலம் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
டி20 போட்டியில் ஒரு ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற சாதனையை 2012-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்கு எதிராக படைத்தார்.
இதுவரை டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ரஹானே சதமடித்த எந்த போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்தது இல்லை. 12 சதங்கள் அடித்துள்ளார்.
2002-ஆம் ஆண்டு அண்டர் 15 இந்திய அணியை வழிநடத்தினார். 2007-ஆம் ஆண்டு அண்டர் 19 அணியில் விளையாடியுள்ளார்.
இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்துள்ளார். 28 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி அந்த மைதானத்தில் வெற்றி பெற உதவினார்.
முதல் இரண்டு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு விளையாடி வந்தார். பிறகு 2011-ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்.
ரஹானே எட்டு வயது இருக்கும் போது அவரை விட 3 மடங்கு வயதுள்ள ஒருவர் தொடர்ந்து 3 பந்துகள் பவுன்ஸர்கள் வீசியுள்ளார். இதனால் ஹெல்மெட் அணிந்த ரஹானேவின் தலையில் பட்டது. பிறகு அழுவதற்கு ஆரம்பித்தார். பின்னர் அதே பவுலரின் பவுலிங்கில் தொடர்ந்து 5 பவுண்டரிகள் அடித்து அசத்தினார்.
சச்சின் எழுதிய “ப்ளேயிங் இட் மை வே” என்ற புத்தகத்தில் ரஹானேவை நான் பல வருடங்களாக அறிந்திருக்கிறேன், அவர் விளையாடுவதை எவ்வளவு நேசிக்கிறார் என்று பார்த்திருக்கிறேன், கடந்த சில ஆண்டுகளாக முழுமையான அர்ப்பணிப்புடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என்று சச்சின் கூறியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக 2016-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். கேப்டனாக ஆஸ்திரேலியா அணியுடன் 2016-17-ஆம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் விளையாடி வெற்றி பெற வைத்தார்.
ரஹானே கராத்தேவில் ப்ளாக் பெல்ட் வாங்கியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே வெற்றி பெற்ற பிறகு கோப்பை வழங்கும் நிகழ்வின்போது ஆப்கானிஸ்தான் அணி வீரர்களையும் அழைத்தார். முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியதை சிறப்பிக்கும் வகையில் ஒன்றாக இரு அணி வீரர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ரஹானேவின் இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.