ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. மொஹாலியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. அதேபோன்று இந்தூரில் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
இதையடுத்து குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா களமிறங்கின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 56 ரன்களும், அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 4 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசி 96 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், எடுத்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்களையும் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் அஸ்திரேலியா அணி 352 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் 353 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். விராட் கோலி 56 ரன்கள் எடுத்தார். போட்டியின் இறுதியில் 49.4 ஓவர்களில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இருப்பினும் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.